- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தென்மேற்கு வங்காள விரிகுடா
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- கேரளா...
சென்னை: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 10ம் தேதி வரையில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது. கேரளா மற்றும் வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீலகிரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்துள்ளது. பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொருத்தவரையில் பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியே இருந்தது.
இந்நிலையில், தெற்கு கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளதால் இன்று முதல் 10ம் தேதி வரை கடலோர தமிழகம், தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். காலை நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும்.
இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் இயல்பைவிட வெப்பநிலை குறைவாக இருக்கும். 8ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். மேலும் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும்.
