×

ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க நிர்பந்தம் அமித்ஷா நெருக்கடியால் எடப்பாடி கடும் அதிர்ச்சி: ஜனவரி இறுதிக்குள் முடிவு எடுக்க கெடு

 

திருச்சி: வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு பலம் வாய்ந்த 60 முக்கிய தொகுதிகளை பாஜவுக்கு ஒதுக்க வேண்டும். ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் கூட்டணி பேச்சு முடியும் வரை எடப்பாடியை சந்திக்க மாட்டேன். ஜனவரி இறுதிக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க ேவண்டும் என்று அமித்ஷா கெடு விதித்து உள்ளதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்து உள்ளார்.
புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றுமுன்தினம் மதியம் 3 மணியளவில் ராணுவ விமானம் மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து, திருச்சியில் உள்ள ஓட்டலில் தங்கினார். மாலையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அவர் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் திருச்சி வந்து, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜ போட்டியிட விரும்பும் 60 தொகுதிகளின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்க, தமிழக பாஜ நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டதாக தெரிகிறது. அதன்படி, பாஜ நிர்வாகிகளும் எடப்பாடியிடம் இந்த பட்டியலை அளித்தார்களாம். பாஜ கேட்கும் 60 தொகுதிகளும் அதிமுகவுக்கு பலம் வாய்ந்த முக்கிய தொகுதிகளாகும். இதனால் எடப்பாடி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அவசர அவசரமாக அவர் திருச்சிக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து, வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப.குமார் உள்ளிட்டோர் தனியார் ஓட்டலுக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, பாஜ கேட்ட 60 தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா கறாராக கூறிவிட்டாராம். இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை திருச்சியில் சந்தித்து சமாதானப்படுத்த நினைத்தாராம். ஆனால், 60 சீட்டுக்கு ஒப்புக்கொள்வதாக இருந்தால் சந்திக்கிறேன், இல்லை என்றால் கூட்டணி பேச்சு முடியும் வரை எடப்பாடியை சந்திக்க மாட்டேன் என்று அமித்ஷா மீண்டும் அவர்களிடம் கறாராக கூறிவிட்டாராம். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க வேண்டும், அமமுக, பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும், ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று அமித்ஷா அவர்களிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து திருச்சி செல்லாமல் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்று விட்டாராம்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லை. மேலும் அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என பாஜ அழுத்தம் ெகாடுத்து வருகிறது. 2 பேரையும் கட்சியில் சேர்க்க முடியாது என்று அமித்ஷாவிடம், எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்து விட்டார். இதனால் 2026 தேர்தலில் இதுவரையிலும் கூட்டணி முடிவாகாததால் புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் யாரையும் பாஜவினர் மேடை ஏற்றவில்லை. சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஓபிஎஸ், அமித்ஷாவிடம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க கூடாது. அப்படி முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அதிமுகவின் பொது செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இந்த கோரிக்கையை அமித்ஷா நிராகரித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தரப்பினர் தவெக கூட்டணிக்கு செல்ல முடிவு செய்ததாக தெரிகிறது. இதையறிந்த அமித்ஷா, அவர்களை மீண்டும் பாஜ கூட்டணிக்கு அழைத்து வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதிமுகவுக்கு பலம் வாய்ந்த தொகுதிகளில் 60 சீட்டுகளை பெறுவது, ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் இணைப்பது என்ற முடிவில் அமித்ஷா உறுதியாக இருப்பதால் எடப்பாடி, அமித்ஷாவுடனான சந்திப்பை தவிர்த்து விட்டார்,’’ என்றனர். இந்நிலையில், திருச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2வது நாளாக நேற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசினார். நேற்றுமுன்தினம் இரவு நடந்த பேச்சுவார்த்தையடுத்து, அமித்ஷாவுக்காக காலை முதலே ஓட்டலில் காத்திருந்த அவர், பிற்பகல் 12.40 மணியளவில் அமித்ஷா ஓட்டலுக்கு வந்தார். தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் வேலுமணி மட்டும் உள்ளே அழைக்கப்பட்டார். வேலுமணியுடன் வந்த முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் ஜெயபால், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. தொடர்ந்து, மதிய உணவை அமித்ஷாவுடன் சேர்ந்து வேலுமணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், ஓபிஎஸ், டிடிவியை சேர்ப்பதற்கு சம்மதம் என எடப்பாடி தெரிவித்துள்ளதாக வேலுமணி அமித்ஷாவிடம் கூறியதாக தெரிகிறது. இதில் முக்கியமாக, அவர்கள் 2 பேரும் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்க கூடாது என வேலுமணி தெரிவித்தாராம். அப்போது, குறுக்கிட்ட அமித்ஷா, அதை நான் பார்த்து கொள்கிறேன். நான் சொல்லுவதை தான் நீங்கள் செய்ய வேண்டும், எனக்கு நீங்கள் ஆர்டர் போடக்கூடாது என தெரிவித்தார். ஜனவரிக்குள் நான் சொன்ன அனைத்தையும் முடிக்க வேண்டும் கெடு விதித்தாராம். மேலும், பொங்கலுக்கு முன் தேமுதிக, பாமக, டிடிவி, ஓபிஎஸ் இணைப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் எனக்கூறினார். இது தொடர்பாக பியூஷ் கோயல் உங்களிடம் பேசுவார் என தெரிவித்தார். பாஜவுக்கு கேட்ட 60 தொகுதியை பரிசீலனை செய்வதாக வேலுமணி கூறியுள்ளதாக தெரிகிறது. சுமார் 1.30 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இறுகிய முகத்துடன் வேலுமணி ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்க முயன்ற போது, அவர் கொடுக்காமல் புறப்பட்டு சென்றார்.

 

Tags : Edappadi ,Amit Shah ,OPS ,TTV ,Trichy ,BJP ,AIADMK ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...