×

சிவாஜி கணேசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதாவை பார்த்து ஆவேசமாக பேசியதால் என்னை கல்லால் அடித்து திட்டினார்கள்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

சென்னை: இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டு காலம் நிறைவுற்றது. அதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கே.பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசியதாவது: திரைக்கதைதான் ஒரு படத்துக்கு முதுகெலும்பு. அந்த முதுகெலும்புதான் பாக்யராஜ். அவர் திரைக்கதையில் வல்லவர். ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அது என் வாழ்க்கையிலும், பாக்யராஜ் வாழ்க்கையிலும் மறக்க முடியாது. 1995ல் சிவாஜி சாருக்கு செவாலியே விருது மலேசியாவில் கொடுத்தார்கள். அதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவருக்கு திரையுலகமும், அரசும் சேர்ந்து பாராட்டு விழா நடத்தினார்கள்.

அதில் சி.எம் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் நான் ஜெயலலிதாவை பார்த்து ஆவேசமாக பேசினேன். எப்போதுமே கோபத்துக்கு ஆயுசு ரொம்ப கம்மி. ஆனால், கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளுக்கு ஆயுசு ரொம்ப ஜாஸ்தி. அதனால்தான் கோபத்தில் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அப்படி நான் ஆவேசமாக பேசும்போது, சி.எம்முக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அங்கு இருந்தவர்களுக்கு முகம் மாறிவிட்டது.

அதற்கு பிறகு ஓப்பன் ஜீப்பில் சிவாஜியை ரசிகர்கள் முன்னால் வலம் வர ஏற்பாடு செய்தார்கள். நான் ஏறியபோது, வேண்டாம் என்று விஜயகுமார் சொன்னார். இதில் என்ன இருக்கிறது என்று நானும் ஏறிவிட்டேன். போகும்போது சிலர் கல்லால் அடித்தார்கள். பயங்கரமாக கத்தினார்கள். அப்போது சில ரசிகர்கள் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தார்கள். அவர்களுக்கு கையெழுத்து போட்டு முடிப்பதற்குள் எல்லா ஆர்ட்டிஸ்ட்டும் பஸ்சில் ஏறி சென்றுவிட்டார்கள். எனக்கு எங்கே போக வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு குரூப் இங்கே வாங்க என்று சொல்ல, இன்னொரு குரூப் அங்கே போங்கள் என்று சொல்ல, அதில் சிலர் என் தலையில் அடித்தார்கள், கிள்ளினார்கள், திட்டினார்கள்.

அப்போது ஒரு வாய்ஸ் கேட்டது. யார் என்று பார்த்தால், நம்முடைய பாக்யராஜ். பக்கத்தில் இருந்த போலீஸ்காரர்களிடம் சத்தம் போட்டு, ஒரு நடிகரிடம் இப்படி நடந்துகொள்கிறார்கள். சும்மா நின்று வேடிக்கை பார்க்கிறீர்களே. ஒழுங்காக அவரை ஜீப்பில் கொண்டு போய் வீட்டில் விடுங்கள். இல்லை என்றால் உங்களை விட மாட்டேன். மீடியாவில் சொல்லிவிடுவேன் என்றார். உடனே அவர்கள் பயந்து, என்னை ஜீப்பில் அழைத்து சென்று, பாதுகாப்பாக வீட்டில் விட்டார்கள். இதை என்னால் மறக்க முடியாது. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Tags : Sivaji Ganesan ,Jayalalithaa ,Rajinikanth ,Chennai ,K. Bhagyaraj ,Kalaivanar Arangam ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம்...