×

மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது

 

 

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி, நிலத்தை டிராக்டர் மூலம் உழுத தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, மூதாட்டியை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த தேவர்முக்குளம் அருகே, ஆட்டுபாலன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணாமலை(70). இவரது கணவன் உருமுசெட்டி இறந்து விட்ட நிலையில், தனது 2 மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் பாகம் பிரிக்கப்படாமல் உள்ள பூர்வீக நிலத்தில், உண்ணாமலை கணவரின் அண்ணன் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் குமார்(50), அவரது மனைவி கல்பனா(45) மற்றும் உறவினர்கள் சேர்ந்து, நேற்று முன்தினம் டிராக்டர் கொண்டு உழவு பணி மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, தனது மகன்கள் இல்லாத சமயத்தில், இது போன்று செய்யக்கூடாது. சொத்து தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அராஜகத்தில் ஈடுபடாதீர்கள் எனக் கூறி உண்ணாமலை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் மற்றும் கல்பனா, உண்ணாமலையை அருகில் இருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்து, சரமாரியாக தாக்கினர். பின்னர், அவர் கண்ணெதிரே நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உண்ணாமலையின் உறவினரான, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பாஜ தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி அண்ணாமலை என்பவரையும் கீழே தள்ளி தாக்கினர்.

மேலும், பெண் ஒருவர் உண்ணாமலையின் கன்னத்தில் சரமாரியாக தாக்கினார். இது குறித்து உண்ணாமலையின் மருமகள், காவல் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டார். இதையடுத்து குமார், கல்பனா ஆகியோர், மரத்தில் கட்டி வைத்திருந்த உண்ணாமலையை விடுவித்து விட்ட அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட உண்ணாமலை, அவரது உறவினர் அண்ணாமலை, காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர்.

அதன் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி, உண்ணாமலையை கட்டி வைத்து தாக்கிய குமார், அவரது மனைவி கல்பனா, உறவினர் பிரபாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து, டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்தது மட்டுமின்றி பாஜ நிர்வாகியை தாக்கும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags : Krishnagiri ,Kaverippatnam ,
× RELATED 2 குழந்தைகளின் தந்தையுடன் காதல்...