×

நாம் அமரும் விதம் சரிதானா?

நன்றி குங்குமம் தோழி

பிறந்த பத்து மாதத்தில் நாம் உட்காரத் தொடங்கியதும் இப்படித்தான் உட்கார வேண்டும், இப்படி உட்காரக் கூடாது என பல விஷயங்களை சொல்வார்கள். அதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்பது இதுதான். ஒரே மாதிரி நீண்ட காலம் அமர்ந்து கொண்டே இருந்தால் அதில் பலவிதமான பிரச்னைகள் எழக்கூடும்.இந்நிலையில் ஒருவர் எப்படி உட்கார்ந்தால் பிரச்னை வரும், எதனால் உடல் மூட்டுகள் வலிக்கிறது, அதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன, யாருக்கெல்லாம் பாதிப்பு வரும் என்பது போன்ற பல விஷயங்களை இந்தக் கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.

அறிவியல்…

நாம் அமரும் போது நம் தலை முதல் முதுகு வரையிலான அத்தனை எடையையும் நம் இரு புட்டங்கள் தாங்குகிறது.கால்களை நீட்டி நேராக வைத்திருக்கும் போதும், முதுகினை நேராக வைத்திருக்கும் போதும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக நம் தசைகள் தொடர்ந்து சுருங்கி விரிந்து நம்மை விழாமல் காக்கிறது. நாம் அமர்வதற்கு முக்கியமாக இயங்கும் தசைகள் நம் முதுகு தசைகளும், வயிற்று தசைகளும்தான். முதுகு தசைகள் என குறிப்பிடப்படுவது கழுத்தின் பின்பகுதியில் இருந்து இடுப்பு வரை வரும் நீண்ட தசைகள்.

என்னென்ன பிரச்னைகள்..?

நீண்ட காலம் நாம் தவறான உடல் பாங்கோடு அமரும் போது முதுகு வலி வரும். மேலும், கழுத்து வலி, கால் மூட்டு வலி வரலாம். இவை இல்லாமல் உடல் பாங்கு(Poatures) பிரச்னையான கூன் விழுவது, ஒரு பக்கமாக முதுகுத் தண்டு வளைவது போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். மேலும், இப்படி தொடர்வதால் தசைகள், மூட்டுகள், ஜவ்வுகள் பலவீனம் ஆகிறது. இதனால் சின்ன விபத்துதான் எனினும் ஜவ்வு கிழிவது, தசை நாண் கிழிவது, எலும்பு முறிவது வரை நிகழும்.

காரணங்கள்…

தசைகள் சமச்சீராக இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம். ஒரு பக்கம் இருக்கும் தசைகள் பலவீனமாகவும், மறுபக்கம் இருக்கும் தசைகள் இறுக்கமாகவும் இருக்கும் நேரத்தில் இப்படி பாதிப்புகள் நிகழக் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து நாம் பல மணி நேரம் பல காலமாக ஒரே மாதிரி அமரும் போது தசைகளில், மூட்டுகளில் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். முறையான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருந்தால் கட்டாயம் வயிற்றுப் பகுதி தசைகள் பலவீனமாகவும், முதுகு, கால், இடுப்பு தசைகள் இறுக்கமாகவும் இருக்கும். இதுவே உடல் மூட்டு வலிகளுக்கு முக்கியக் காரணம்.

தீர்வுகள்…

நாம் உடற்பயிற்சிகள் செய்து கொள்வதன் மூலம் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். நீண்ட நேரம் நீண்ட நாட்களுக்கு அமரும் சூழல் இருந்தால் அவர்கள் தொடர்ந்து பயிற்சிகள் செய்வது அவசியம். இவையில்லாமல் தசைகளுக்கு தேவையான ஓய்வு கொடுப்பது, தசைகளை புத்துணர்வோடு வைத்துக் கொள்வதற்கான நீச்சல் பயிற்சி, சுடுநீர் குளியல் போன்ற விஷயங்களும் அவசியமாக தேவைப்படுகிறது.நீண்ட நேரம் உட்காரும் சூழல் இருப்பவர்கள் அல்லது உடலில் எந்த மூட்டுகளிலும் பிரச்னை வராமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை சந்தித்து தேவையான தசை பரிசோதனைகளை செய்துகொண்டு, அதற்கேற்ப உடற்பயிற்சிகளை கற்றுத் தெரிந்து கொள்வது அவசியம்.

அவரவரின் தேவைக்கேற்ப, தசை வலிமைக்கு ஏற்ப இயன்முறை மருத்துவர் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், அதனை எவ்வாறு செய்ய வேண்டும், எத்தனை எண்ணிக்கையில் செய்ய வேண்டும் போன்ற பல விஷயங்களை பரிந்துரைத்து கற்றும் தருவார். தசைத் தளர்வு பயிற்சிகள்(Stretching Exercises), தசை வலிமை பயிற்சிகள்(Strengthening Exercises) போன்ற பல வகைகள் உள்ளது. இது இல்லாமல் அவரவரின் தொழில் தேவைக்கேற்ப தசைகளை மெருகேற்றவும் உதவி செய்வார்.

யாருக்கெல்லாம் வரலாம்..?

*நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் சூழலில் இருப்பவர்கள்.

*தரையில் அமராமல் எப்பொழுதும் நாற்காலிகள் போன்ற பொருட்களில் உட்காருபவர்கள்.

*அதிக நேரம் வாகனம் ஓட்டும் நபர்கள்.

*உடற்பயிற்சிகள் செய்யாமல் ஆனால், உடலுக்கு அதீதமான தொழில் சுமையினை மட்டும் தொடர்ந்து தருபவர்கள்.

அமரும் நிலையில் எது சிறந்தது..?

கீழே உட்காருவதுதான் 100 சதவிகிதம் சிறந்தது. அதிலும் கீழே உட்கார்ந்து சம்மணக்கால் போடுவது, கீழே உட்கார்ந்து முதுகை நேராக வைத்து காலை நீட்டி உட்காருவது நல்லது. நாற்காலியில் அமர்பவராக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது எழுந்து நடந்துவர வேண்டும். வாகன ஓட்டிகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடக்க வேண்டும். நீண்ட நேரம் நாற்காலியில் மட்டுமே அமர்ந்து வேலை செய்பவர்கள் பணிக்கு செல்லாத நேரங்களில் தரையில் அமர்வது சிறந்தது.

ஏற்கனவே மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் அதனை சரி செய்து கொள்வதற்கும், மேலும், பிரச்னை தீவிரமாகாமல் இருப்பதற்கும் கீழே அமர்வது அவசியம். மொத்தத்தில் நாம் தினசரி உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக இருந்தால்தான் நம் செளகரியத்துக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் அமரலாம் என்பதை புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Tags :
× RELATED வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!