×

தவறான தீர்ப்பால் இளைஞருக்கு சிறை; சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

 

ஜபல்பூர்: பாலியல் வழக்கில் இளைஞருக்குத் தவறாகத் தண்டனை வழங்கியதற்காக, போக்சோ நீதிமன்ற நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞருக்கு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த ரவி கோல் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜபல்பூர் சிறப்புப் போக்சோ நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் மைனர் எனக் கருதி ரவி கோலுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனால் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

உண்மையில் அந்தப் பெண், ரவி கோலை விரும்பித் திருமணம் செய்து கொண்டு 2 மாதங்கள் அவருடன் குடும்பம் நடத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் எலும்புப் பரிசோதனை அறிக்கையில் அவருக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தும், கீழமை நீதிமன்றம் அந்த முக்கிய ஆதாரத்தைக் கருத்தில் கொள்ளாமல் அவருக்குத் தண்டனை வழங்கியது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற அமர்வு, ஆதாரங்களைப் புறக்கணித்த கீழமை நீதிமன்றத்தின் செயல்பாட்டைக் கடுமையாகச் சாடியது.

மருத்துவ அறிக்கையை மறைத்துத் தவறான தீர்ப்பு வழங்கியதை, ‘அறிவார்ந்த நேர்மையின்மை’ என்று நீதிபதிகள் விமர்சித்தனர். மேலும், ‘வயதுச் சான்றிதழைப் பரிசீலிக்காமல் விட்டது பெரும் தவறு. இதனால் ஒரு நிரபராதி 3 ஆண்டுகள் சிறையில் வாடியது பெரும் அநீதியானது’ என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து ரவி கோலை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ‘கவனக்குறைவாகச் செயல்பட்ட சிறப்புப் போக்சோ நீதிமன்ற நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நோட்டீஸ் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Madhya Pradesh ,Jabalpur ,Madhya Pradesh High Court ,POCSO court ,Ravi Kol ,Jabalpur, Madhya Pradesh ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான...