நியூயார்க்: அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ, போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்காக நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது அமெரிக்கா ‘போதைப்பொருள் தீவிரவாதம்’ மற்றும் கொக்கைன் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ‘யுஎஸ்எஸ் ஐவோ ஜிமா’ போர்க்கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்டனர். சனிக்கிழமை இரவு 8.52 மணியளவில் புரூக்ளினில் உள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்புக்காவல் சிறையில் மதுரோ அடைக்கப்பட்டார். இந்நிலையில், நியூயார்க் தெற்கு மாவட்ட ஃபெடரல் நீதிமன்றத்தில் மதுரோ மற்றும் அவரது மனைவி இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணியளவில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதிபர் மதுரோ அடைக்கப்பட்டுள்ள சிறையானது 1990ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதும், இங்கு ஏற்கனவே ஆர்.கெல்லி, சீன் டிட்லி கோம்ப்ஸ் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மாயோ போன்ற பிரபல குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிரடி தாக்குதலில் 80 பேர் பலி
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவைக் கைது செய்வதற்காக ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ என்ற பெயரில் கடந்த 3ம் தேதி அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தத் திடீர் தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. வெனிசுலாவின் வான்பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் முடிவில், அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்டு விசாரணைக்காக அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மதுரோவின் பாதுகாப்பிற்காக நின்றிருந்த கியூபா நாட்டைச் சேர்ந்த 32 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கியூபா அரசும், அமெரிக்க அதிபர் டிரம்பும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வெனிசுலா மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் அமெரிக்கத் தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
