- எங்களுக்கு
- வெனிசுலா
- வெளியுறவு அமைச்சர்
- மார்கோ ரூபியோ
- வாஷிங்டன்
- மாநில செயலாளர்
- ஜனாதிபதி
- நிக்கோலா மடுரோ
- அமெரிக்க…
வாஷிங்டன்: வெனிசுலா நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாது என வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கடந்த 3ம் தேதி அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்தன. இதுகுறித்து புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ விடுதியில் அன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘வெனிசுலாவில் முறையான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை, அந்நாட்டை அமெரிக்காவே நிர்வாகம் செய்யும்’ எனத் தெரிவித்திருந்தார். அதிபரின் இந்தக் கருத்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும், மத்திய கிழக்கு நாடுகளைப் போல அமெரிக்கா மீண்டும் ஒரு நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்யப்போகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் கருத்துக்கு மாறாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘வெனிசுலாவின் தினசரி ஆட்சி நிர்வாகத்தில் அமெரிக்கா கண்டிப்பாகத் தலையிடாது. ஆனால், அந்நாட்டின் மீது அழுத்தத்தை உருவாக்கும் வகையில், அங்கிருந்து வரும் எண்ணெய் கப்பல்களைத் தடுக்கும் முயற்சியை மட்டுமே கட்டுப்படுத்தும். மேலும், வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (இடைக்கால அதிபர்) ஒத்துழைக்க மறுத்தால், மதுரோவை விடக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்குப் போதிய ஆதரவு இல்லாததால், அவருக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘எங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் மதுரோவை விடக் கடுமையான விளைவுகளை டெல்லி ரோட்ரிக்ஸ் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்துள்ளார். மேலும், ‘வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்பைச் சீரமைத்து, அதன் வருவாய் மூலம் எங்கள் செலவுகளை ஈடுகட்டுவோம்’ என்றும் டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு ஐ.நா சபை பொதுச்செயலாளர், சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மோடி மிகவும் நல்ல மனிதர்
ரஷ்யா – உக்ரைன் போர் சூழலில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறித்து அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்தியப் பிரதமர் மோடி மிகச் சிறந்த மனிதர்; அவர் ஒரு நல்லவர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்தவே அவர்கள் (இந்தியா) அந்த முடிவை (ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி குறைப்பு) எடுத்தார்கள். வர்த்தக ரீதியாக நாங்கள் நினைத்தால் அவர்கள் (இந்தியா) மீது உடனடியாக வரியை உயர்த்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்கச் செயல்படுவதாக அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
