விருதுநகர், ஜன. 5: விருதுநகரில் சீசன் நேரங்களில் ஜவுளிக்கடைகள் புதிதாக வெளியூர் நபர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என விருதுநகர் ஜவுளி மற்றும் ரெடிமேட் சங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் லட்சுமி நகர் நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில், விருதுநகர் ஜவுளி மற்றும் ரெடிமேட் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் செந்தில் பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அவ்வப்போது சீசன் நேரங்களில் மட்டும் வெளியூர் நபர்கள் புதிய ஜவுளிக் கடைகள் திறப்பதால், ஏற்கனவே ஜவுளிக்கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே சீசன் ஜவுளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய திருமண மண்டப உரிமையாளர்கள் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதில் தலைவர் செந்தில்பிரபு, செயலாளர் ஸ்ரீராம்முருகேசன், பொருளாளர் ஹாரூன்ரசீத், துணைத்தலைவர்கள் ராமபிரான் மற்றும் ஜெய்லானி, இணைச் செயலாளர்கள் ராம்குமார், பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
