×

பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏற்காடு, ஜன. 5: அரையாண்டு தேர்வு விடுமுறை நிறைவடையும் நிலையில், கடைசி நாளான நேற்று பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், பூங்காக்களில் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர். பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை கடைசி நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டியில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். பூலாம்பட்டி – நெரிஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகில் உற்சாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.

இங்குள்ள படித்துறை மற்றும் கைலாசநாதர் கோயில், சிறுவர் பூங்கா, மூலப்பாறை பெருமாள் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், கோயில்பாளையம் பெருமாள் கோயில், கதவணைப்பாலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இங்குள்ள கடைகளில் வறுத்த மீன்களை வாங்கி ருசித்து சாப்பிட்டனர். மேலும், பில்லுக்குறிச்சி கிழக்கு கால்வாயில் சிறுவர் முதல் பெரியவர்கள் என அனைவரும் குளித்தும், நீச்சல் பழகி மகிழ்ந்தனர். அதிகப்படியான மக்கள் கூட்டம் இருந்ததால், பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Tags : Phulampatti ,Yercaud ,
× RELATED கன்னியாகுமரி ரயிலில் கடத்திய 33 கிலோ கஞ்சா பறிமுதல்