சிவகங்கை,ஜன.5: அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பாக்கியமேரி சிவகங்கையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டதை வரவேற்கிறோம். அதற்காக அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றுவோம் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அங்கன்வாடி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், சமீபத்திய அரசின் அறிவிப்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அரசு உடனடியாக இந்த விவகாரத்தை பரிசீலித்து, அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6ம் தேதி மாவட்டம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், ஜன.27ம் தேதி தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும். இவ்வாறு தெரிவித்தார்.
