×

பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் இன்று முதல் பள்ளிகளை புறக்கணிக்க இடைநிலை ஆசிரியர்கள் முடிவு

சென்னை: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சு வார்த்தை ந டத்தாவிட்டால், இன்று முதல் பள்ளி செல்வதை புறக்கணிக்கப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களை போலீசார் கைது செய்வதும், விடுவிப்பதுமாக இருக்கின்றனர். புத்தாண்டு தினத்திலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் பெண் ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் நிலையில், அந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை தொடரப் போவதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட போராட்ட ஆசிரியர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை அழைத்து பேசிய அரசு, அதற்கு பிறகு ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களை அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமவேலைக்கு சம ஊதிய வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் நேற்று வரையில் அரசுத் தரப்பில் பேச்சு வார்த்தை குறித்து எந்த அழைப்பும் வராத நிலையில், இன்று முதல் பள்ளிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Secondary Teachers Association ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு...