- எடப்பாடி
- அஇஅதிமுக
- ராஜேந்திர பாலாஜி
- சிவகாசி
- மேற்கு மாவட்ட
- சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
- முன்னாள் அமைச்சர்
- திமுக
- எம்.கே. ஸ்டாலினா...
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ேநற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தல் களத்தில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டுமே போட்டி. எடப்பாடியா, மு.க.ஸ்டாலினா என்றுதான் போட்டி. அதிமுகவிற்கு எதிர்ப்பான கொள்கை கொண்ட கட்சி திமுக தான். நமது எதிரணிக்கு பக்கத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஒட்டுச்சுவர் தான். அவர்களைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வருபவர்கள் வரட்டும், இருப்பவர்களை வைத்து வெல்லக்கூடிய வல்லமை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
நாங்கள் ஆதரித்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லிக் கொள்ளும் கட்சிகளுக்கு 234 தொகுதிகளில் போட்டியிடக் கூட வேட்பாளர்கள் கிடையாது.
நாங்கள்தான் புதிய வரலாறு, புதிய வெளிச்சம் என சொல்லிக் கொள்ளும் கட்சியினருக்கு களப்போராளிகளும், வாக்குச்சாவடி முகவர்களும் கூட கிடையாது. போக்கஸ் அரசியலை வைத்து சித்து விளையாட்டு காட்டுகிறார்கள். களத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் போட்டி என்பதுதான் 100 ஆண்டுகால நடைமுறையாக இருக்கும். யார் வந்தாலும் மக்கள் கூடுவார்கள். திரையில் வருபவர்களை நேரில் பார்க்க மக்கள் கூட்டம் வரும். ஆனால் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது. அதிமுகவை யார் குறைவாக மதிப்பிட்டாலும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால் அதிமுகவை எங்கேயோ கொண்டுபோய் அடகு வைத்திருப்பார்கள். இவ்வாறு பேசினார். பாஜவிடம் அதிமுகவை எடப்பாடி அடமானம் வைத்துவிட்டதாக சொந்த கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், எடப்பாடி இல்லையென்றால் அதிமுகவை அடமானம் வைத்து இருப்பார்கள் என ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளதை ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை’ என்பது போல் பேசுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
