- அமித் ஷா
- என்டிஏ
- எடப்பாடி பழனிசாமி
- சேலம்
- மத்திய உள்துறை அமைச்சர்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- பாஜக
சேலம்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தவிப்பிற்குள்ளாகியுள்ளார். தமிழ்நாட்டில் 2 நாட்கள் முகாமிட்டும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் நழுவிச் செல்வதால், பாஜ மேலிடம் கடும் கோபத்திற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்ய தீவிரம் காட்ட துவங்கியுள்ளன. திமுக கூட்டணி மிக பலமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் எப்படியாவது இம்முறை காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த ஓராண்டுக்கு முன்பே அதிமுகவுடன் பாஜ கூட்டணியை அறிவித்தது. அதிமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்திருந்த அண்ணாமலையை, பாஜ மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கி, எடப்பாடி பழனிசாமியை தங்களது வளையத்திற்குள் கொண்டு வந்து கூட்டணியை பேசி முடித்தனர்.
முன்னதாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, இனிமேல் எப்போதும் பாஜவுடன் கூட்டணி வைக்க போவதே இல்லை என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், சில வழக்குகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை, சிபிஐ வசம் இருப்பதால், வேறு வழியின்றி அவர்களுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை பலமாக மாற்ற பாஜ முயற்சித்து வருகிறது. இதற்காக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுள்ள ஓபிஎஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஒன்றிணைக்க, பலகட்ட முயற்சிகளை கையில் எடுத்து பாஜ தோற்றது. டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாடு தேர்தலுக்கான தே.ஜ. கூட்டணியை இறுதி செய்து விட வேண்டும் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்பினர். அதற்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை இறுதி செய்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை மீண்டும் அனுப்பி வைத்தனர்.
அவர் சென்னை வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஓபிஎஸ்., டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பாஜ தலைமை விரும்புவதை எடுத்துக்கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து, மற்ற கட்சிகளுடன் பேசலாம் எனக் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால், பெரும் ஏமாற்றத்துடன் பியூஸ் கோயல் டெல்லி திரும்பினார். அவர், எடப்பாடியின் கருத்துகளை அமித்ஷாவிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். இதன் காரணமாக, தானே களத்தில் குதித்து, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித்ஷா 2 நாள் பயணமாக, நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். ஆனால், அமித்ஷாவை நேரில் பார்ப்பதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்துள்ளார். அமித்ஷா வருவதை அறிந்தே அவர், நேற்றும்(4ம் தேதி), இன்றும் முறையே சேலம், கள்ளக்குறிச்சியில் எழுச்சி பயணம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறி நழுவியிருக்கிறார் எனக்கூறப்படுகிறது.
அவரை நேரில் சந்தித்து பேசும் சூழல் ஏற்பட்டால், எப்படியாவது ஓபிஎஸ்., டிடிவி.தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர நெருக்கடி தரப்படும் என்பதால் அவர் தவிர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பாமக தரப்பில் ராமதாஸ் ஒருபுறமும், அன்புமணி ஒருபுறமும் பிரிந்து நிற்கின்றனர். இருவரும் ஒன்றிணைந்து வரும் வாய்ப்பே இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதால், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தே.ஜ. கூட்டணிக்குள் கொண்டு வர தற்போது வாய்ப்பில்லை என பாஜ தலைமை ஏமாற்றமடைந்துள்ளது. தேமுதிக தரப்பிலோ, வரும் 9ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்து விட்டார். கடந்த தேர்தலின் போது, ஒரு மாநிலங்களவை எம்பி சீட் தருவதாக, அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி கூறி விட்டு, ஏமாற்றி விட்டார் என்ற அதிருப்தி அக்கட்சி நிர்வாகிகளிடையே உள்ளது. அதனால், அதிமுக, பாஜ கூட்டணியை தவிர்க்கும் முடிவை நோக்கி, தேமுதிக செல்லும் எனக் கூறப்படுகிறது. இதுவும் அமித்ஷாவிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதே சமயம், இத்தனை நாட்களாக அமித்ஷா பேச்சுக்கு கட்டுப்பட்டு காத்திருந்த ஓபிஎஸ்., டிடிவி.தினகரன் ஆகியோரும் என்ன முடிவு எடுப்பது என்று திணறி வருகின்றனர். தவெகவில் இணைந்த செங்கோட்டையன், இவர்கள் இருவரையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார். இதுவும் அமித்ஷாவிற்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பாமக, தேமுதிக என எந்த கட்சி நிர்வாகிகளுடனும் பேச்சு நடத்த முடியாத சூழலில், 2 நாட்கள் தமிழ்நாட்டில் அமித்ஷா முகாமிட்டுள்ளார். அவரது வருகையால், தே.ஜ. கூட்டணி இறுதியாகும் என்ற நிலை, தற்போது இல்லை என பாஜ நிர்வாகிகளே வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். கூட்டணி இறுதியாகாததற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என பாஜ மேலிடம் கருதுகிறது. இதனால் அவர் மீது கடும் கோபத்தில் பாஜ தலைமை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பாஜ, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
