தஞ்சை: வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் டிடிவி.தினகரனுக்கு வழங்குவது என்று தஞ்சையில் இன்று நடந்த அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், இன்று தஞ்சையில் அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் கோபால் தலைமையில் நடந்தது. இதில் மாநில நிர்வாகிகள் சண்முகவேல், முருகன், ராஜா, பார்த்திபன், சி.ஆர்.சரஸ்வதி, செந்தமிழன், வீரபாண்டி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
