×

அறநிலையத்துறை சார்பில் ரூ.108.90 கோடி மதிப்பீட்டிலான 19 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்: ரூ.15 கோடியில் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 திருக்கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, 15 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 10 முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டை காணொலிக் காட்சியில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி திருக்கோயிலில் 59.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்னி தீர்த்தம் படித்துறை, வாகன நிறுத்துமிடம், பிர்லா காட்டேஜ் பகுதி, திருக்கோயில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அடிப்படை வசதி மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல்; 16.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென்காசி மாவட்டம், குற்றாலம், ஸ்ரீ பராசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் புதியதாக 54 கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல்; திருவாரூர், தியாகராஜசுவாமி திருக்கோயிலில் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கமலாலய திருக்குளம் திருப்பணி, தேவாசிரிய மண்டபம் மற்றும் முன்மண்டபம் பழுது பார்த்து புதுப்பித்தல்;

சென்னை, வியாசர்பாடி, ரவீஸ்வரர் திருக்கோயிலில் 3.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டுதல்; ஈரோடு மாவட்டம், பெருந்துறை, செல்லாண்டியம்மன் திருக்கோயிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசந்த மண்டபம் கட்டுதல் என மொத்தம் 108.90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். 1.81 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலகம், ஈரோடு மாவட்டம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.23 கோடி ரூபாய் செலவிலான 3 சிற்றுந்துகள் என மொத்தம் 15.30 கோடி ரூபாய் செலவிலான 10 முடிவுற்ற பணிகள், 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு, உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Department of Religious Endowments ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Chennai Secretariat ,Hindu Religious Endowments Department ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்