×

புத்தாண்டு தினத்தில் ஓட்டலில் தங்கியிருந்த ஆஸ்கர் நடிகரின் மகளான நடிகை மர்ம மரணம்: ஹாலிவுட் திரையுலகினர் கடும் அதிர்ச்சி

 

சான் பிரான்சிஸ்கோ: பிரபல ஹாலிவுட் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் டாமி லீ ஜோன்ஸின் மகள் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகர் டாமி லீ ஜோன்ஸின் மகள் விக்டோரியா ஜோன்ஸ் (34). இவர் தனது தந்தையைப் போலவே நடிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு ‘தி த்ரீ பரியல்ஸ் ஆஃப் மெல்குயட்ஸ் எஸ்ட்ராடா’ மற்றும் ‘மென் இன் பிளாக்’ போன்ற பிரபலமான படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யூனியன் சதுக்கப் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த இவர், புத்தாண்டு தினமான நேற்று நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் சந்தேகமடைந்து சென்று பார்த்தனர். அப்போது விக்டோரியா ஜோன்ஸ் அறையில் அசைவற்ற நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் மற்றும் போலீசார் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘விக்டோரியாவின் மரணத்தில் தற்போதைக்குச் சந்தேகத்திற்கிடமான தடயங்கள் எதுவும் இல்லை, எனினும் ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளின் மறைவு குறித்து டாமி லீ ஜோன்ஸ் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, இந்தத் துயர நேரத்தில் எங்களின் தனிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : New Year's Day ,Hollywood ,San Francisco ,Tommy Lee Jones ,Tommy Lee ,
× RELATED பலுசிஸ்தானில் சீன ராணுவம் குவிப்பு: இந்தியா தலையிட பலுச் தலைவர் கோரிக்கை