×

ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடி ஒட்டிய கிரிக்கெட் வீரருக்கு போலீசார் சம்மன்!

ஜம்மு: ஜம்முவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, ஹெல்மெட்டில் பாலஸ்தீன நாட்டின் கொடியை ஒட்டி விளையாடிய வீரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் தனியாரால் நடத்தப்படும் ‘ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்’ என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், இது அங்கீகரிக்கப்படாத ஒரு தனியார் போட்டி என்றும் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடரின் ஒரு பகுதியாக ஜம்மு டிரையல் பிளேசர்ஸ் மற்றும் ஜேகே-11 அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்தச் சூழலில், ஜேகே-11 அணிக்காக களமிறங்கிய உள்ளூர் வீரரான ஃபுர்கான் பட், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பாலஸ்தீன நாட்டின் தேசியக் கொடியை ஒட்டியிருந்தது மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான தகவல் அறிந்ததும், டோமனா காவல் நிலைய போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

வீரர் ஃபுர்கான் பட் மற்றும் போட்டி அமைப்பாளர் ஜாகித் பட் ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி விசாரித்தனர். இதுகுறித்து பாஜக தலைவர் ஆர்.எஸ்.பதானியா கூறுகையில், ‘விளையாட்டைப் பயன்படுத்தி தேசத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்ப முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது’ என்று விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் நோக்கிலேயே, எதற்காக அந்தக் கொடி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jammu ,Jammu Kashmir Champions League ,Jammu and ,Kashmir ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக உஸ்மான் கவாஜா அறிவிப்பு!