×

குட்டி ஜப்பானில் குதூகலம் ரூ.450 கோடிக்கு காலண்டர் விற்பனை: அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி: சிவகாசியில் நடப்பாண்டு ரூ.450 கோடிக்கு மேல் காலண்டர் விற்பனை நடந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் போதும், வீடுகள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முதன்மையாக இருப்பது தினசரி காலண்டர்கள் மற்றும் மாத காலண்டர்கள் தான்.

2026 புத்தாண்டை வரவேற்கும்விதமாக குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. பிரத்யேகமாக, தினசரி மற்றும் மாத காலண்டர்கள் தயாரிப்பு பணிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டன.  தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சுமார் 90 சதவீத ஆர்டர்களுக்கு காலண்டர்கள் அனுப்பும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மீதமுள்ள ஆர்டர்களை, இன்னும் ஒரு சில நாட்களில் அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு காலண்டர்கள் விற்பனை சுமார் ரூ.450 கோடிக்கு மேல் இருந்ததாக காலண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விறுவிறுப்பான காலண்டர்கள் விற்பனையால் சிவகாசி பகுதியில் உள்ள காலண்டர் தயாரிப்பாளர்கள், அச்சக உரிமையாளர்கள், பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து காலண்டர் தயாரிப்பாளர்கள் கூறும்போது, ‘‘2026 புத்தாண்டிற்கான தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணிகளும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணிகளும் தற்போது நடைபெற்றது. விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் இந்த ஆண்டு அரசியல் கட்சிகளின் ஆர்டர் அதிகமாக கிடைத்தது. பிரதான அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் லட்சக்கணக்கில் காலண்டர்கள் ஆர்டர் கொடுத்து வாங்கி உள்ளனர்.

எனவே காலண்டர் விற்பனை கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 15 சதவிகிதம் அதிகரித்திருந்தது. அடுத்த 2027ம் ஆண்டு புத்தாண்டிற்கான காலண்டர் தயாரிக்கும் பணிகள் மீண்டும், வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று, தமிழ் பஞ்சாங்கம் வெளியானவுடன் துவங்கும்’’ என்றனர். தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்க தலைவர் கற்பகா ஜெய்சங்கர் கூறியதாவது, ‘‘2025ம் ஆண்டு நிறைவு பெற்று 2026ல் உதயமாய் இருக்கின்ற இந்த இனிய புத்தாண்டு தினத்தில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் காலண்டர் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும் 5 சதவிகிதம் அரசியல் கட்சிகள் ஆர்டர்கள் தைப்பொங்கல் பிறக்கும் காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக 5 சதவிகிதம் அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதை நாங்கள் ஒரு போனசாக கருதுகிறோம். நடப்பாண்டு 4 கோடி முதல் நாலேகால் கோடி காலண்டர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

Tags : Little Japan ,Sivakasi ,New Year ,
× RELATED குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு...