திருத்தணி,ஜன.1: திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த வாரம் வடமாநில வாலிபரை கஞ்சா போதை சிறுவர்கள் 4 பேர் ரீல்ஸ் மோகத்தில், பட்டா கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருத்தணி ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த திருத்தணி நேரு நகர் சேர்ந்த பழைய பட்டு புடவை வியாபாரி ஜமால் பாய்(40) என்பவரை 4 பேர் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவத்தில் காயமடைந்த அவரை போலீசார் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி ரயில் நிலையத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயணிகள் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ரயில்வே போலீஸ் எஸ்பி ஈஸ்வரன் நேற்று மாலை திருத்தணி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த ஜமால் பாய் என்பவரிடம் தாக்குதல் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் ரயில்வே போலீசார் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்று எஸ்பி ஈஸ்வரன் தெரிவித்தார்.
