டெல்லி: உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் 3 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு வரி விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இரும்புத் தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இரும்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக சீனா, வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இரும்புப் பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் உள்நாட்டு இரும்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
வர்த்தக முறைகேடுகள் தடுப்பு இயக்குனரகம் நடத்திய ஆய்வில், ‘திடீரென அதிகரித்துள்ள இந்த இறக்குமதியால் உள்ளூர் சந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 200 நாட்களுக்கு 12 சதவீத தற்காலிக வரி விதிக்கப்பட்டு, அது நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தற்போது நீண்ட கால தீர்வு காணப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, சீனா, வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை எஃகு பொருட்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியானது முதல் ஆண்டில் 12 சதவீதமாகவும், 2வது ஆண்டில் 11.5 சதவீதமாகவும், 3வது ஆண்டில் 11 சதவீதமாகவும் இருக்கும். துருப்பிடிக்காத எஃகு மற்றும் சிறப்பு வகை இரும்புகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளதால், அந்தப் பொருட்கள் இந்தியாவை நோக்கித் திருப்பப்படுவதைத் தடுக்கவே, குளிர்ச்சியூட்டப்பட்ட எஃகு தகடுகள் மற்றும் குளிர்பதன வாயுக்களுக்கும் ஒன்றிய அரசு சமீபத்தில் 5 ஆண்டுகள் வரை வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.
