×

விவாகரத்து செய்யும் ஆண்கள் மறுமணம் செய்யும்போது பெண்களை சுயநலவாதிகள் என்று முத்திரை குத்துவதா?.. நடிகை மலைக்கா அரோரா காட்டம்

 

மும்பை: விவாகரத்துக்குப் பின் தான் சந்தித்த அவமானங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து நடிகை மலைக்கா அரோரா மனதிறந்து பேசியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை மலைக்கா அரோரா, கடந்த 1998ம் ஆண்டு நடிகர் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் நடிகர் அர்ஜுன் கபூருடன் மலைக்கா நெருங்கி பழகி வந்தார், ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். இதற்கிடையே அர்பாஸ் கான், ஷூரா கான் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பெண்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் மலைக்கா அரோரா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘விவாகரத்து செய்தபோது பொதுமக்களிடம் இருந்து மட்டுமின்றி, எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். எப்படி உன்னுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியை மட்டும் முக்கியமாக நினைக்கிறாய்? என அவர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆண்கள் விவாகரத்து செய்துவிட்டு வயது குறைந்த பெண்ணை மறுமணம் செய்தால் சமூகம் அவர்களை கொண்டாடுகிறது.

ஆனால் பெண்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக ஒரு முடிவு எடுத்தால் அவர்களை சுயநலவாதிகள் என முத்திரை குத்துவது வேதனையளிக்கிறது. அந்த நேரத்தில் பல சிரமங்களை சந்தித்தாலும், மன அமைதிக்காகவும், எனது மகனின் எதிர்காலத்திற்காகவும் நான் எடுத்த முடிவு குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பு பொருளாதார ரீதியாகத் தனித்து நிற்க வேண்டும்’ எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.

Tags : Malaika Arora ,Mumbai ,Bollywood ,Arbaaz Khan ,
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு...