டேராடூன்: இமயமலைத் தொடரில் கடினமான பாறைகளுக்கு இடையே ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக் நகரங்களை இணைக்கும் வகையில் 125 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியாக 105 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சமோலி மாவட்டம் ருத்ரபிரயாக் – கர்ணபிரயாக் இடையே உள்ள சுரங்கப்பாதையில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சுரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்து தடைகள் ஏற்பட்டதால், ரயில் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குகைக்குள் நடந்த இந்த விபத்தால் பயணிகள் பயத்தில் அலறினர். இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுரங்கத்திற்குள் போதிய இடவசதி மற்றும் வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கர்ணபிரயாக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ‘புவியியல் ஸ்திரத்தன்மை அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா’ என்பதை கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
