ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை தடுப்புச்சுவரில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை தமிழகம்-கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திம்பம் மலை பாதையில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. நேற்று இரவு திம்பம் மலை பாதையில் சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை தடுப்பு சுவரில் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்தினார்.
பின்னர் அந்த வாகன ஓட்டி சிறுத்தையை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். சிறிது நேரத்தில் மீண்டும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. சிறுத்தை தடுப்புச்சுவரில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரம் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
