ராயபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயக்குமார் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தண்டையார்பேட்டை: வரும் தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை தோற்கடிப்போம், என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து, சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை ராயபுரம் பழைய ஆடுதொட்டி சாலையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசியதாவது: ராயபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருக்கும் ஜெயக்குமார், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் எதையும் இதுவரை பூர்த்தி செய்யவில்லை. அதிமுகவில், முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் அனைவரும் ஊழல் செய்து, பலகோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக கவர்னரிடம் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளோம்.

அமைச்சர் ஜெயக்குமார், இப்பகுதி மீனவர்களுக்கு வாக்கிடாக்கி வாங்கியதில் ரூ.30 கோடி ஊழல் செய்திருக்கிறார். விளம்பரத்துக்கு ரூ.1000 கோடி செலவு செய்யும் இந்த அரசு, மக்களின் அடிப்படை தேவைகளை கண்டுகொள்ளாமல் உள்ளது. அமைச்சர்கள் தங்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்துகொள்கின்றனர். இந்தமுறை அமைச்சர் ஜெயக்குமார் இந்த தொகுதியில் போட்டியிட மாட்டார். வேறு தொகுதியில் போட்டியிட அவர் இடம் தேடி வருகிறார். அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நாங்கள் போட்டியிட்டு தோற்கடிப்போம். தற்போது அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளனர். இதனால், வரும் தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்.

தற்போது ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் அனைத்து அமைச்சர்களும் தண்டனை பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>