- வேலூர்
- செய்யார் நீதிமன்றம்
- செய்யாறு
- பெருமாள்
- நாகப்பா நகர், கோடாநகர், செய்யார் டவுன், திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாறு, டிச.31: ஆட்டோ டிரைவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருடிய வாலிபருக்கு செய்யாறு கோர்ட் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் கொடநகர் நாகப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(35), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி. செய்யாறு சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். அதேபோல் பெருமாளும் ஆட்டோ ஓட்டும் பணிக்கு சென்றார். இதையடுத்து, மாலை இருவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டிலிருந்து மர்ம நபர் ஒருவர் தப்பியோடியதை பார்த்து கத்தி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மர்ம நபரை பிடித்து செய்யாறு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கைதானவர் வேலூர் டவுன் அக்ராவரம் பகுதி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாபு மகன் குணசேகரன்(41) என்பதும், வீட்டில் இருந்து சுமார் 375 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியதும் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த செய்யாறு குற்றவியல் நீதிமன்ற நடுவர் கே.ஆர்.பாலாஜி குணசேகரனுக்கு 6 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். கடுங்காவல் தண்டனை பெற்ற குணசேகரனை, போலீசார் வேலூர் மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.
