×

தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பதை கண்டறிந்தால் புகார் தெரிவிக்கலாம்

*மாவட்ட கலெக்டர் பேச்சு

தேனி : தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்ட அரங்கில், பள்ளி மற்றும் கல்லூரிகளில்போதைப் பொருள்கள் ஒழிப்பு சம்பந்தமாக கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடந்தது இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ் பி சினேஹாப்ரியா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

போதைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும், போதை எதிர்ப்புமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கல்வி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது. மேலும், பள்ளிகளில் தினசரி காலையில் நடைபெறும் இறைவணக்கத்தில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். விடுதிகளிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அருகே, போதைப்பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

போதைப்பொருட்கள் தடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேனி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்.

இதனைத்தொடர்ந்து, போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்களுக்கான கையேட்டினை கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் எஸ்.பி கலைக்கதி ரவன், முதன்மைக் கல்வி அலுவலர் நாகேந்திரன், உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா மற்றும் கல்லூரி முதல்வர்கள் பள்ளி தலைமையாசிரியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Theni ,District ,Theni District Collector's Office ,District Collector… ,
× RELATED மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என...