மாமல்லபுரம், டிச.30: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை ஆட்டோவில் பயணம் செய்து புராதன சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் புகழ் பெற்ற கோயில்களை சுற்றிப் பார்க்க திட்டமிட்டனர். அதன்படி, 15க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். இந்நிலையில், 15க்கும் மேற்பட்டோர் ராணி, சூப்பர் மேன், பேட்மேன் உள்ளிட்ட காமிக்ஸ் உடையணிந்து ‘‘ஆட்டோ சேலஞ்ச்’’ என்ற பெயரில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஆட்டோவில் மாமல்லபுரம் வந்தனர். பின்னர், புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, புதுச்சேரி திருநள்ளார், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் நவகிரக கோயில், ராமேஷ்வரம், தனுஷ்கோடி மற்றும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றிப் பார்த்து விட்டு, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோயிலுக்குச் சென்று மீண்டும் சென்னைக்கு வந்து தங்களது ‘‘ஆட்டோ சேலஞ்ச்’’ பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, மாமல்லபுரம் வந்த இங்கிலாந்து நாட்டினரை சுற்றுலாப் பயணிகள் கைதட்டி வரவேற்று போட்டிபோட்டுக் கொண்டு செல்பி எடுத்ததை காணமுடிந்தது.
