×

வடமதுரை-ஒட்டன்சத்திரம் சாலையில் விபத்துகளை தடுக்க ஹைமாஸ் அமைக்கப்படுமா..? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வடமதுரை, டிச.30: வடமதுரை-ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில், தென்னம்பட்டி சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரை-ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை வழியாக திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் வடமாவட்டங்களில் இருந்து பழநிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், முருக பக்தர்களின் வாகனங்கள், வடமதுரை வழியாக விரைவில் பழநி செல்ல குறுகிய தூரம் உள்ள இந்த சாலையில் பயணித்து பழநிக்கு சென்று வருகின்றனர்.

திண்டுக்கல்லில் இருந்து வரும் அரசு, மற்றும் தனியார் நகர பேருந்துகள், வடமதுரை-ஒட்டன்சத்திரம் சாலையில் வந்து தென்னம்பட்டி மூன்று ரோடு சந்திப்பில் கிழக்கு திசையில் பிரிந்து போகும் சாலையின் வழியாக பிலாத்து, ஆண்டிபட்டி, பாகாநத்தம், மலைப்பட்டி சித்துவார்பட்டி, கொம்பேறி பட்டி, வடுகபட்டி, ஆகிய கிராமங்களுக்கு செல்கின்றன. அதே போல் வேடசந்தூர் பகுதியில் செயல்படும் டெக்ஸ்டைல்மில் தொழிலாளிகளை ஏற்றி வரும் மில் வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள், பால் வண்டிகள் இந்த வழிச்சாலை சந்திப்பின் வழியாக இரவு பகலும் அதிகளவில் சென்று வருகிறது. மேலும் இந்த சாலை சந்திப்பின் மேற்கு பகுதியில் உள்ள தென்னம்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பெரும்புள்ளி ஆகிய கிராம மக்கள் எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் கரூர், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த தென்னம்பட்டி மூன்று சாலை சந்திப்பில் பேருந்துக்காக காத்திருந்து பயணிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதியில், உயர்மின் கோபுர விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தில் உயர் கோபுர மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: வடமதுரை-ஒட்டன்சத்திரம் சாலையில் கேரளா மாநில பகுதியிலான கோட்டயம், பாலக்காடு, திருச்சூர் ஆகிய ஊர்களுக்கு நாகப்பட்டினத்தில் இருந்து மீன் லோடு ஏற்றிச்செல்லும் கண்டெயினர் வாகனங்கள், பழநி, தாராபுரம், கோவை செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இரவு நேரங்களில் அதிகளவில் சென்று வருகின்றன. இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு இல்லாததால் மாலை ஆறு மணிக்கு மேல் இந்த இடத்தில் ஒரே இருட்டாக இருக்கும். அதனால் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளைத் தடுக்க இந்த சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் வெளிச்சத்தில் நின்று வாகனங்கள் வருவது பார்த்து எச்சரிக்கையாக சாலையை கடப்பார்கள். அதேபோல் இரு திசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு வெளிச்சத்தில் மக்கள் நடமாட்டம் இருப்பதும் தெரியும். எனவே அதன் மூலம் விபத்தை தடுக்கலாம். எனவே இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Vadamadurai-Ottanchathiram road ,Vadamadurai ,Thennampatti Road ,Vadamadurai-Ottanchathiram State Highway ,Trichy ,Pudukkottai ,Manapparai ,Kumbakonam ,Velankanni ,Nagore ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...