×

தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: புதிய பாடத்திட்டத்தின் கீழ் பிப்ரவரியில் நடத்தப்பட உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் அரசு கணினி சான்றிதழ் தேர்வுகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு (COA) ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்கீழ் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகள் ஏற்கனவே இருந்து வரும் பாரம்பரிய முறையிலும், கணினிவழி முறையிலும் நடத்தப்படும். பாரம்பரிய வழிமுறையிலான சுருக்கெழுத்து தேர்வு பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதியும், கணக்கியல் தேர்வு பிப்ரவரி 9ம் தேதியும் தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதியும் நடைபெறும்.

அதேபோல், கணினி வழியிலான தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு மற்றும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (டிச.30ம் தேதி) தொடங்கி ஜனவரி 19ம் தேதி முடிவடையும். தேர்வர்கள் https://tndtegteonline.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் டிஜிட்டல் சான்றிதழ்களை (e-certificates) மே 27 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Department of Technical Education ,Commissioner ,Innocent Divya ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...