×

களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கூடுதல் கட்டிட பணி 3 மாதங்களாக முடங்கியது

* விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு அதிகாரிகள் ‘ஆப்பு’

* கனவு கலைந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி

களக்காடு : களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கூடுதல் கட்டிடங்கள் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

களக்காட்டில் இருந்து நாங்குநேரி செல்லும் ரோட்டில் பெல்ஜியம் என்ற இடத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில், களக்காடு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், வெளிநாட்டை சேர்ந்த பிரிடா மோனியோ என்பவரால் தொடங்கப்பட்டது ஆகும்.

அதன்பின் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மருத்துவமனை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் மருத்துவமனையை தொடங்கிய பிரிடா மோனியோ பெயராலேயே பிரிடா மோனியோ அரசு மருத்துவமனை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 20க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. ஆண்கள், பெண்களுக்கென தனித் தனி உள்நோயாளிகள் அறை உள்ளது. களக்காடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ தேவைகளுக்கு இந்த மருத்துவமனையை தான் நம்பியுள்ளனர். தினசரி 250க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு தனித் தனியாக குடியிருப்புகளும் உள்ளன. தினமும் இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் கட்டிடங்கள், மருத்துவ பரிசோதனை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர். மருத்துவ பரிசோதனைகளுக்கு அவர்கள் வெளியூர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கோ, தனியார் மருத்துவமனைகளுக்கோ செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.

இதனை தவிர்க்க களக்காடு அரசு மருத்துவமனையை விரிவு படுத்தி, தேவையான மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள், கூடங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கனவு திட்டம் என்றே குறிப்பிடலாம்.

இதனை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் மருத்துவ துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இதன் விளைவாக தமிழ்நாடு அரசின் 15வது நிதிக்குழு நல்வாழ்வு திட்டத்தின் கீழ் களக்காடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், எக்ஸ்ரே வசதி ஏற்படுத்தவும் ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த மார்ச் மாதம் புதிய கூடுதல் கட்டிடத்திற்கான பணிகள் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே இப்பணிகள் கடந்த 3 மாதங்களாக முடங்கியுள்ளது. கட்டுமான பணிகள் தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பதும் தெரியவில்லை. நகராட்சி அந்தஸ்து பெற்ற களக்காட்டில் வேறு அரசு மருத்துவமனைகள் இல்லை.

நீர்வளத்துறை அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த மருந்தகமும் மூடப்பட்டு, அங்கு நகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் களக்காடு நகராட்சி மற்றும் யூனியன் பகுதி பொதுமக்கள் இந்த ஒரு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர். தற்போது கூடுதல் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

களக்காடு அரசு மருத்துவமனையை விரிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் கட்டுமான பணிகள் முடக்கப்பட்டதால் மருத்துவமனையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அதிகாரிகள் ‘ஆப்பு’ வைத்து விட்டதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே நிறுத்தப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கவும், களக்காடு அரசு மருத்துவமனையை விரிவுபடுத்தவும் மருத்துவ துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணியாளர்கள் பற்றாக்குறை

பழமை வாய்ந்த இந்த அரசு மருத்துவமனையில் இரு டாக்டர்கள், 5 செவிலியர்கள், 2 தற்காலிக செவிலியர்கள், 2 மருந்தாளுனர்கள், 1 அலுவலக ஊழியர் என மொத்தம் 11 பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. தினமும் இங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு போதிய பணியாளர்கள் இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பணியாளர்கள் பற்றாகுறையால் சிகிச்சை பெறவும், பரிசோதனைகள் மேற்கொள்ளவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. எனவே களக்காடு அரசு மருத்துவமனைக்கு 5 டாக்டர்கள் உள்பட போதிய பணியாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ வசதிகள் தேவை

களக்காடு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பரிசோதனைக்காக நெல்லைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே களக்காடு அரசு மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ்ரே உள்பட அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மடை மாற்றப்பட்ட நிதி

இதுபற்றி நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் காங் தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், ‘களக்காடு அரசு மருத்துவமனையை விரிவு படுத்த ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டத்திற்கு மடை மாற்றி விடப்பட்டுள்ளது.

இதனாலேயே கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. மருத்துவ பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு மருத்துவத் துறை அதிகாரிகள் களக்காட்டை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்களோ? என்ற கேள்வி எழுந்துள்ளது’ என்றார்.

Tags : Kalakkad Government Hospital ,Kalakkad ,Kalakkad… ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...