சென்னை: ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கக் கூடாது. அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டியே, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, வாகனங்களை ஓட்டும் போது செல்போன் பேச கூடாது, மது அருந்த கூடாது, பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்,
அவமதிக்கக் கூடாது, மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும்போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், அரசு பேருந்து ஓட்டுநர்கள் சிலர் பேருந்து இயக்கும் போது செல்போனில் பேசுவதாக பல குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது தங்களது செல்போனை நடத்துநர்களிடம் கொடுக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
