நெல்லை : நெல்லையில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைப்பதற்காக மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை ஜன.15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நாளில் மண்ணில் விளைந்த காய்கறிகள், கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் குலைகள் உள்ளிட்டவைகளை கதிரவனுக்கு படையலிட்டு புதுப்பானை வைத்து மண் அடுப்பு கூட்டி புத்தரிசி பொங்கலிட்டு கோலாகலமாக தமிழர்கள் கொண்டாடுவர்.
இந்த பாரம்பரிய பண்டிகையை தொழில் நிமித்தமாக பல நூறு மைல்கள் தாண்டி சென்றாலும் தமிழர்கள் மறப்பதில்லை. இதற்கு சான்றாக பெங்களூரில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
பண்டைய காலத்து வழக்கப்படி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அடுப்புகட்டி கூட்டி பனை ஓலைகளில் பொங்கல் வைப்பது வழி வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் பஞ்சவர்ணம் தீட்டப்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்வது வழக்கம். புதுமணத் தம்பதிகளுக்கு பஞ்ச வர்ண பானை, பஞ்ச வர்ண பெட்டிகளில் தலைபொங்கல் படி வழங்குவது மரபாகும்.
நவநாகரீக மோகத்தால் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கேஸ், மின்சார அடுப்புகளில் பித்தளை, வெண்கல, சில்வர் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். ஆனாலும் ஆண்டு தோறும் பெங்களூரில் வாழும் தமிழர்கள் 200 பேர் மண்பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்காக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை தயார் செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 17 நாட்கள் உள்ள நிலையில் மண்பானைகள் தயார் செய்யப்பட்டு வெயிலில் உலர்த்தி பின்னர் தீ மூட்டி பானையை சூளையில் வேக வைத்து தயார்படுத்தப்படுகிறது.
சூளையில் வேகவைத்து எடுத்து பாலீஷ் செய்து ஜனவரி முதல் வாரம் லாரி மூலம் பொங்கல் பண்டிகைக்காக பெங்களூருக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் பானைகள் சப்ளை செய்யப்படும். ஒரு பானை ரூ.100 முதல் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. வண்ணங்கள் தீட்டப்பட்ட பெரிய பானைகள் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது என மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காருகுறிச்சியில் தயாராகும் அடுப்பு கட்டிகள்
பொங்கல் பண்டிகைக்காக நெல்லை மாவட்டம் காருகுறிச்சியில் மண்பாண்ட தொழிலாளர்கள் செம்மண் அடுப்புக் கட்டிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அடுப்புகள் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.மூன்று கட்டிகள் கொண்ட அடுப்புகள் ரூ.250க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்வார்கள் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
