×

நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

பூந்தமல்லி: போரூர் ஆர்.இ.நகரை சேர்ந்தவர் சத்யா (எ) சத்யராஜ் (40), கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோசி (35). இவர்களுக்கு சூர்யா (9) என்ற மகனும், நித்யா (7) என்ற மகளும் உள்ளனர். சத்யராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து உதைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு குழந்தைகள் இருவரும் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வழக்கம் போல மது போதையில் வீட்டுக்கு வந்த சத்யராஜ் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ் மனைவியின் தலையை சுவற்றில் மோதியதில் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, சத்யராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரோசியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரோசி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போரூர் காவல் நிலைய போலீசார், ரோசியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், தனிப்படை அமைத்து ஆரம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த சத்யராஜை கைது செய்தனர்.

Tags : Poonthamalli ,Borur R. E. Satya ,Satyaraj ,Rosie ,Surya ,Nidya ,
× RELATED கணவனை கொன்றுவிட்டு பள்ளிக்கு சென்ற ஆசிரியை: கள்ளக்காதலனுடன் கைது