×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகத்தில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: பயன்படுத்தி கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

 

 

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம் சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் முதல் எஸ்.ஐ.ஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணியை தொடங்கியது. முதலில் கடந்த 11ம் தேதி படிவங்கள் பணி முடிவடைய இருந்தது. ஆனால் 2வது முறையாக கடந்த 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் முடிந்ததும் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்பவும் பெற்று விட்டனர். அதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளனர். அவைகளில், 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,60,332 பெண் வாக்காளர்கள், 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் 4,19,355 மாற்றித்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதம் ஆகும். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,25,018 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 பெயர்களும், 3வதாக கோவை மாவட்டத்தில் 6,50,590 பெயர்களும், 4வதாக திருப்பூர் மாவட்டத்தில் 5,63,785 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல, வருகிற ஜனவரி 3,4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளிலும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள் உள்ளிட்ட புதிய வாக்காளர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் உள்ளவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 1,68,825 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும் (படிவம் 6) அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தகுதியான வாக்காளர்களை பட்டியல் சேர்க்கப்பட்ட பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும். இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி?
வாக்காளர்கள் voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம். பின்னர் ‘தேடல்’ பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களை காணலாம். இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை நீங்கள் உறுதிசெய்து கொள்ளலாம்.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,Election Commission of India ,
× RELATED திருவாரூரில் பெற்றோரை இழந்த 3...