×

அட்வகேட் to ஃபேஷன் டிசைனர்!

நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒருவரின் ஆடை ரசனைகளுக்கு ஏற்ப புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களின் ஆடைகள் நாளுக்கு நாள் நவீனம் பெறுகின்றன. சொல்லப்போனால் பிளாக் அண்ட் வொய்ட் காலத்தில் நம் கதாநாயகிகள் அணிந்த ஆடைகள்தான் இன்று 2.0 வெர்ஷன் என்ற பெயரில் ஃபேஷனாக உள்ளது. அதற்கு இணையம் பல வகையில் தன்னுடைய கரங்களை நீட்டியுள்ளது.

அதாவது, உலகில் ஃபேஷன் குறித்த அப்டேட்களை நமக்கு உடனடியாக கொண்டு வருவது சமூக வலைத்தளங்கள் தான். அதற்கேற்ப இங்குள்ள ஃபேஷன் டிசைனர்களும் தங்களை அப்டேட் செய்து கொள்கிறார்கள். குறிப்பாக இன்று பலரும் தங்களுக்கான கஸ்டமைஸ்டு ஆடைகளைதான் அதிகம் விரும்புகிறார்கள். காரணம், நேர்த்தியான வடிவமைப்பு, விரும்பும் டிசைன்கள் என அனைத்தும் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும்.

முன்பெல்லாம் ஏரியாவுக்கு ஒரு டெய்லர் இருப்பார். அவர்தான் அந்தப் பகுதி பெண்களுக்கு தேவையான அனைத்து வித ஆடைகளையும் தைத்து தருவார். ஆனால், இப்போது டெய்லர்கள் அனைவரும் ஃபேஷன் டிசைனர்களாக மாறிவிட்டனர். விரும்பிய டிசைன்களை குறிப்பிட்டால் போதும் உலகின் எந்த மூலையிலிருந்தும் ஆடை வடிவமைக்கப்பட்டு நம் கையில் கிடைக்கும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. அதை புரிந்து கொண்டு கடந்த பத்து வருடமாக ஃபேஷன் துறையில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்து வருகிறார் சசிரேகா கவியரசன். ஆடை வடிவமைப்பில் ஏற்பட்ட ஆர்வத்தினால் வழக்கறிஞர் பணியை விட்டு முழுக்க முழுக்க ஃபேஷன் டிசைனராக அவதாரம் எடுத்துள்ளார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். நமக்கான தேவை, விருப்பம் என்னவென்று தெரியாததால், கிளினிக்கல் நியூட்ரிஷியனில் இளங்கலைப் பட்டம் முடிச்சேன். கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு மாத பரேட் கேம்பில் பங்கேற்ற போதுதான் எனக்கு வெளியுலகத்திற்கான அறிமுகம் கிடைத்தது. பயிற்சிக்கு பிறகு எனக்குள் ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காக சேலம் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றேன்.

தொடர்ந்து ஆறு மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்தேன். என் கணவரும் வழக்கறிஞர். வீட்டை எதிர்த்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். அப்போது கணவருக்கு கோவையில் வேலை கிடைத்ததால் அங்கு செட்டிலானோம். குழந்தைகள், வீடு என்றானதால் என்னால் வழக்கறிஞராக தொடர முடியவில்லை. என்னுடைய மனநிலையை புரிந்து கொண்ட என் கணவர் என்னை சொந்தமாக தொழில் செய்ய சொல்லி ஐடியா கொடுத்தார். சிறு வயதிலிருந்தே ஆடைகளை வடிவமைப்பதில் விருப்பம் இருந்ததால் ‘டிப்ளமோ இன் ஃபேஷன் டிசைனிங்’ படித்தேன்’’ என்றவர் அதன் பிறகு தன்னை முழு நேர டிசைனராக மாற்றிக் கொண்டுள்ளார்.

‘‘டிசைனிங் முடித்த பிறகு எனக்கான ஆடையினை நானே தைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அது எனக்கு ஏற்ற புதிய ஸ்டைலில் அமைத்தேன். அதைப் பார்த்து என் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நான் அணியும் ஆடைகள் புதுமையாக இருப்பதாகக் கூறி அவர்களுக்கும் உடைகளை வடிவமைக்க சொல்லி கேட்டார்கள். நான் தங்கியிருந்த குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பிரத்யேகமாக டிசைன் செய்து கொடுத்தேன். எங்க குடியிருப்பில் உள்ள அனைவரின் பிரியமான டிசைனராக மாறினேன். அவர்கள் வீட்டின் அனைத்து விசேஷங்களுக்கும் நான்தான் உடையினை வடிவமைத்துக் கொடுத்தேன்’’ என்றவர் சென்னைக்கு வந்த பிறகு ‘சசி ஃபேஷன் ஸ்டுடியோ’என்ற பெயரில் உடை டிசைனிங் ஸ்டுடியோவினை ஆரம்பித்துள்ளார்.

‘‘நான் தொழிலில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்த போதுதான் ஆரி வேலைப்பாடு பிரபலமாக ஆரம்பித்தது. அதனால் அதையும் கற்றுக் கொண்டேன். நான் தொழிலுக்கு வந்த காலத்தில் இருந்து இன்று வரை என் வாடிக்கையாளர்கள் என்னை கைவிடவில்லை. தனியாளாக ஆரம்பித்த இந்தத் தொழிலை இன்று மூன்று கிளைகளாக விரிவுபடுத்தியுள்ளேன். இந்த பிசினஸ் பொறுத்தவரை நாம் செய்யும் டிசைனிங்க்கு தான் காசு. அதனால் சாதாரண மக்கள் முதல் பெரிய விஐபி வரை அனைவருக்கும் அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப வடிவமைத்து தருகி றேன். மணமகளுக்கான ஆரிவொர்க் பிளவுஸ், புடவையினை வடிவமைப்பதுதான் எங்கள் ஸ்பெஷாலிட்டி. பல்க் ஆர்டர்களையும் எடுத்து செய்கிறோம்’’ என்றவர் சென்னை மட்டுமில்லாமல் அமெரிக்கா, அரபு நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு கஸ்டமைஸ் முறையில் ஆரி பிளவுஸ்களை வடிவமைத்து தருகிறார்.

‘‘வெளிநாட்டில் வசிப்பவர்களின் உறவினர்கள்தான் என்னை அணுகுவார்கள். அவர்கள் மொத்தமாக ஆர்டர்கள் கொடுப்பார்கள். அதன் பிறகு நான் வாடிக்கையாளர்களுடன் இணையத்தில் பேசி அவர்கள் விரும்பும் டிசைனை வடிவமைத்து தருவேன். என் வளர்ச்சிக்கு ஒட்டு மொத்த காரணம் என் கணவர்தான். அவர் என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த பிசினஸை தொடங்க உதவினார்.

நானும் குடும்பத்தையும் பிசினஸையும் ஒன்றாக பார்த்து நம்பிக்கையை காப்பாற்றி வருகின்றேன். என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை அழைத்து வந்து ஆலோசனை கேட்பர். ஐ.டி துறையில் இருந்து மாறி ஃபேஷன் டிசைனராக விரும்புவதாக தெரிவிப்பார்கள். நான் எல்லோருக்கும் சொல்வது ஒன்றுதான். படிப்புக்கு ஏற்ற வேலை எல்லோருக்கும் கிடைக்காது. இந்த துறையை பொறுத்தவரை கிரியேட்டிவிட்டி, உழைப்பு, ஃபேஷன் குறித்த அப்டேட்ஸ் இருந்தாலே போதும் கண்டிப்பாக ஜொலிக்கலாம்’’ என்றார் சசிரேகா கவியரசன்.

செய்தி:கலைச்செல்வி

படங்கள்:கணேஷ்

Tags :
× RELATED சரியான அளவு மற்றும் நுட்பங்களை...