×

நெஞ்சுவலி சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருப்பு; இந்திய ஆடிட்டர் கனடாவில் மரணம்: உருக்கமான வீடியோ வெளியிட்ட மனைவி

 

எட்மன்டன்: கனடாவில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இந்திய ஆடிட்டர், 8 மணி நேரம் காத்திருந்தும் உரிய சிகிச்சை கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் எட்மன்டன் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பிரசாந்த் குமார் (44). கணக்காளராகப் பணியாற்றி வந்த இவருக்கு மனைவி மற்றும் 3, 10, 14 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 22ம் தேதி பணியில் இருந்தபோது இவருக்குக் கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக நண்பகல் 12.20 மணியளவில் அங்குள்ள கிரே நன்ஸ் சமூக மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் 210 வரை உயர்ந்த நிலையிலும், சாதாரண வலி நிவாரணி மாத்திரை மட்டுமே வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, முடிவுகளில் ஆபத்து இல்லை எனக் கூறி மருத்துவர்கள் அவரை மீண்டும் காத்திருக்கச் செய்துள்ளனர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருப்போர் அறையிலேயே அமர வைக்கப்பட்ட அவர், இரவு 8.50 மணியளவில் சிகிச்சை அறைக்கு அழைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நிஹாரிகா ஸ்ரீகுமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மருத்துவமனை நிர்வாகமும் ஊழியர்களும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் என் கணவரைக் கொன்றுவிட்டனர்.

அவசர சிகிச்சைக்காக நான் கெஞ்சியபோது பாதுகாப்பாளர்கள் என்னிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இறப்பதற்கு முன்பு தனது தந்தையிடம் பேசிய பிரசாந்த், ‘அப்பா, என்னால் வலியைத் தாங்க முடியவில்லை’ என்று கடைசியாகக் கூறியது காண்போரை கலங்கச் செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக விரிவான தகவல்களைத் தர இயலாது என்றும், தலைமை மருத்துவப் பரிசோதகர் அலுவலகம் இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Tags : Canada ,EDMONTON ,Prashant Kumar ,Edmonton, Canada ,
× RELATED பாக். ராணுவத்தை விமர்சித்த இம்ரான்...