மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ சிட்டியில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து ஒன்றில் சிகோன்டெபெக் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள ஜோன்டெகோமட்லான் என்ற மலைப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை மற்றும் 9 பெரியவர்கள் என மொத்தம் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகோன்டெபெக் மற்றும் ஹுயாகோகோட்லா மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பண்டிகை காலத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
