×

உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான நடவடிக்கை என்ன?.. திமுக எம்பி இரா.கிரிராஜன் கேள்வி

 

சென்னை: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக எம்பி இரா.கிரிராஜன் பங்கேற்று, ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சரிடம், ‘இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத பங்களிக்கும் அமைப்புசாரா தொழிலாளர் துறையினரின் பாதுகாப்பு மற்றும் போதிய வாய்ப்புகள் இல்லை என்பது உண்மையா? அத்தொழிலாளர்களுக்கு ‘டிஜிட்டல் ஷ்ராம்சேது’ எனும் செயற்கை நுண்ணறிவு தேசிய திட்டம் முன்மொழியப்பட்டு உள்ளதா? இதில், அவர்களுக்கு நிதி பாதுகாப்பின்மை, திறன் மேம்பாட்டு பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், அதிவேக தொழில்நுட்பங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறதா? அமைப்புசாரா தொழிலாளர்களின் சராசரி ஆண்டு வருமானத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?’ என்று கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்த்லாஜே கூறியது: கடந்த 2022-23ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமைப்புசாரா தொழில் துறை 45 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது. 490 மில்லியன் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் எல்லைப்புற தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய நிதி ஆயோக் முறையான ஆய்வு நடத்தியது. இதில் அவர்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த சுற்றுச்சூழலை அமைப்பை உருவாக்கவும், சமூக மேம்பாட்டுக்கான செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் ஒரு பகுதியாக ’டிஜிட்டல் ஷ்ராம்சேது’ எனும் தேசிய பணியை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது.

மேலும் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், அதிவேக கற்றல் கருவிகள் போன்ற முன்னோடி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் பாலத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இதன்மூலம் சரிபார்க்கக்கூடிய அடையாளம் இல்லாமை, பணி பதிவுகள், திறன் சான்றுகள், வேலை தெரிவுநிலை, சரியான ஊதியம் வழங்குதல், சமூகப் பாதுகாப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் உள்பட முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கிய சவால்களை நிவர்த்தி செய்ய இப்பணி முயன்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஊதிய குறியீட்டின்கீழ், குறைந்தபட்ச ஊதியம், சமமான ஊதியம் மற்றும் போனஸ் ஆகியவற்றை நிர்ணயித்தல் அவற்றை செலுத்துவதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று திமுக எம்பி கிரிராஜனின் கேள்விகளுக்கு ஒன்றிய இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

Tags : DMK ,I.Girirajan ,Chennai ,Parliament ,Union Minister of State ,Labour and Employment ,
× RELATED புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே...