ஊட்டி: ஊட்டியில் உறைபனி தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாவரவியல் பூங்காவில் அலங்கார செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உறை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மலர் அலங்கார செடிகள், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்காக விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில், அலங்கார செடிகளை பனி தாக்காமல் இருக்க, செடிகளின் மீது தற்போது கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், ‘‘கோடை சீசனுக்கான நாற்று நடவு உள்ளிட்ட பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. பூங்காவில் உள்ள அனைத்து அலங்கார செடிகளும் கவாத்து செய்யப்பட்டு சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. ஊட்டியில் தற்போது உறை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அலங்கார செடிகளை பாதுகாக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடி பாதுகாத்து வருகிறோம். மேலும் பிளாஸ்டிக் போட்டும் மூடி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.
