×

நட்சத்திர ஓட்டல் முன்பு தகராறு வாலிபர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

*பாஜ நிர்வாகி உட்பட 9 பேர் கைது

கோவை : நட்சத்திர ஓட்டல் முன்பு தகராறில் ஈடுபட்டு 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டிய பாஜ நிர்வாகி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சூரியா (38). இவர் சொந்தமாக நிறுவனம் வைத்து நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 20ம் தேதி சூரியா அவிநாசி ரோடு நீலாம்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஆட்டம் பாட்டத்துடன் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தார்.

அதில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பாஜ ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரகுசூரியா மற்றும் அவரது நண்பர்கள் உதய தீபன், சூர்யகுமார், அபிஷேக், மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மதுபோதையில் நடனமாடும் போது அருகில் இருந்த நபர்கள் மீது மோதி தகராறில் ஈடுபட்டதால் ரகுசூரியா மற்றும் அவரது நண்பர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்கள் சூரியா மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் சூரியா அடுத்த நிகழ்ச்சியை பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்த நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்து இருந்தார். இதை கேள்விப்பட்ட ரகுசூரியா தனது நண்பர்களை அழைத்து கொண்டு ஆயுதங்களுடன் நிகழ்ச்சி நடக்கும் ஓட்டலுக்கு காரில் வந்தார். அங்கு சூரியாவின் நிறுவனத்தில் பணிபுரியும் இருகூரை சேர்ந்த சூரியா (30) மற்றும் தேவராஜ் (32) ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ரகுசூரியா மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிவாளை எடுத்து சூரியா மற்றும் தேவராஜை கை மற்றும் தோள்களில் சரமாரியாக வெட்டியதோடு காரையும் அடித்து உடைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து சூரியா மற்றும் தேவராஜ் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பாஜ ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரகுசூரியா (29), மற்றும் அவரது நண்பர்கள் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் வினோத்குமார் (25), அவிநாசியை சேர்ந்த வசந்தநாயகம் (26), ஈரோடு புளியம்பட்டியை சேர்ந்த நிதிநிறுவன உரிமையாளர் சூரியகுமார் (27), ஈரோடு நம்பியூரை சேர்ந்த தீபக் (27), கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஸ்ரீராம் (24), துடியலூரை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ரிச்சர்ட் (26), வேலாண்டிப்பாளையத்தை சேர்ந்த முகமது உமர் (26), அன்னூரை சேர்ந்த உதயதீபன் (28) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 அரிவாள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Baja ,Bajaj ,Suriya ,Koi Singanallur ,
× RELATED அசோக் நகரில் குடிபோதையில் காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது!!