மதுரை: தவெக நிர்வாகிகள் பண மோசடியில் ஈடுபடுவதாகவும், அவர் கள் மீது நடவடிக்கை கோரியும் மகளிரணி சார்பில் மதுரை கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. தவெகவின் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளராக கல்லாணை உள்ளார். இவர் கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் பதவி வழங்குவதற்கு வட்டச் செயலாளருக்கு ரூ.5 லட்சம் முதல் பதவிக்கு ஏற்ப பணம் பெற்றுக் கொண்டு பதவி வழங்கி வருவதாகவும், கட்சியில் உள்ள பெண்களை பாடி ஷேமிங் செய்யும் வகையில் கேலி செய்வதாகவும் இவர் மீது புகார்கள் எழுந்தன.
கட்சி சார்பில் அச்சிடும் அனைத்து போஸ்டர்களிலும் தனது படம் பிரதானமாக இடம்பெற வேண்டுமென தொண்டர்களை மிரட்டுவதாகவும், பணம் பெற்றுக் கொண்டு சாதி, மதம் பார்த்து பதவி வழங்குவதாகவும், கட்சி சார்பில் எந்த நிகழ்விலும் பங்கேற்பதில்லையெனவும் குற்றம் சாட்டி, சொந்த கட்சியினரே மதுரையில் நேற்று முன்தினம் பெருவாரியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லாணை மீது பலதரப்பட்ட புகார்களையும் தெரிவித்தனர். இந்த சம்பவம் மதுரை தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று தவெக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளரான கல்லாணைக்கு ஆதரவாக அக்கட்சியின் மகளிரணி நிர்வாகிகள், மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், மதுரையில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சத்யா (எ) சக்தி என்பவர், பொதுமக்களிடம் பண மோசடி செய்துள்ளார்; அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவருக்கு கட்சி பொறுப்பு வழங்கப்படவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரை கூறி, பண மோசடி செய்து, தலைவர் விஜயால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாஜி நிர்வாகிகளின் தூண்டுதலின்பேரில் அவர் செயல்படுகிறார். இதற்காக மாவட்ட செயலாளர் கல்லாணை மீது அவதூறாக பணம் பெற்றும், ஜாதி பார்த்தும் பதவி வழங்குவதாக அவதூறாக புகார் கூறி வருகின்றனர். பொய் குற்றச்சாட்டு கூறும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்துள்ளனர். மனு அளிப்பதற்காக நேற்று ஏராளமான தவெக மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஷேர் ஆட்டோக்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
