×

நோய் தீர்க்கும் பல்லி உருவ வழிபாடு

மனிதர்களுக்கு நல்லது கெட்டதை எடுத்துக் கூறும் சக்தியும் தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்க தகுந்த ஜீவ ராசியாக கருதப்படுகிறது. பல்லிகளின் இருப்பிடம் வீடுகளும், ஆலயங்களும்தான். மனித நம்பிக்கைக்கு ஏற்றவாறு பல்லிகள் நிமித்தங்கள் அல்லது சகுனங்களை மொழிகின்றன தவிர பெரும்பாலும் அவைகள் ஒலிகளை எழுப்புவது இல்லை. பண்டைய இந்திய சாஸ்திரத்தில், பல்லி சாஸ்திரம் என்ற படிப்பு இருந்து வந்ததை பார்க்கும்போது, நம் முன்னோர்கள் பல்லி என்ற ஜீவராசிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம். பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு. அசுரனின் உடலாகும்.

பல்லி கத்துவது முதல் அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஓர் அர்த்தத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தீபாவளி அன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால், வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால், குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என நம்பப்படுகிறது.பல்லி குறித்து பல பழமொழிகளும் உள்ளன. “இல்லை இல்லை என்ற இடத்தில் பல்லியும் சேராது’’. “பல்லி சொல்லுக்கு பலனுண்டு கெவுளி சொன்னா கடவுள் சொன்ன மாதிரி’’ “ஈசானியத்தில் பல்லி சொன்னா ஈஸ்வரன் சொன்ன மாதிரி’’ என பல்லி குறித்து பல பழமொழிகள் நம் மக்களிடையே வழக்கத்தில் உள்ளன. சுருங்கக் கூறின், பல்லியை மினி ஜோசியர் என்று கூறலாம். பல்லி விழுதலின் பலன் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். தினசரி காலண்டர்களில் பின்பக்கம்கூட அது இடம் பெற்றிருக்கும்.

பல்லி விழுந்தால் செய்யும் பரிகாரம்

உடனே குளித்துவிட்டு, கோயிலுக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம். பஞ்சகவ்யம் உண்ணலாம். தங்கத்தை தானமாக அளிக்கலாம். விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றலாம். மிருத்யுஞ்ச மந்திரத்தை ஜெபிக்கலாம். பல்லி தலையில் விழுந்தால், பசும்பால் அல்லது கோயில் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் போதும்.

நோய் தீர்க்கும் பல்லி

புராணங்களில் பல்லிகள் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. ஸ்ருங்கி பேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். உரிய வயதில் கல்வி கற்க இருவரும் கௌதம ரிஷியின் குருகுலத்திற்கு அனுப்பப்பட்டனர். இருவரும் முறையாக பாடம் பயின்று வந்தனர். குருவுக்கு சேவை செய்வதே பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து, குரு வார்த்தைக்கு மறுவார்த்தையின்றி தங்கள் கடமையை செவ்வனே செய்து வந்தனர். கௌதம ரிஷி செய்யும் பூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், தீர்த்தம் முதலியன கொண்டு வருவார்கள். ஒரு நாள், பல்லி ஒன்று அந்த தீர்த்த பாத்திரத்தில் விழுந்து உயிரோடு தத்தளித்து கொண்டிருந்தது. ஹேமனும் சுக்லனும் பூஜா திரவியங்களை குருவிடம் அப்படியே கொடுத்தனர். கௌதம ரிஷி பாத்திரத்தை தொட்டவுடன் அதிலிருந்த பல்லி தாவி குதித்து ஓடியது. அதை கண்டு கோபம் கொண்ட ரிஷி, பணியில் கவனமில்லாமல் இருந்த அவர்கள் இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.

இருவரும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினர். மேலும், சாபம் நீங்க பிரயாச்சித்தம் கோரியும் நின்றனர். இந்திரன் யானையாகி வரதனை தரிசிக்க அத்திகிரிக்கு வருவான் அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்று விமோசனத்திற்கு வழி கூறினார் ரிஷி. ஹேமனும் சுக்லனும் பல்லி உருவைப் பெற்று, காஞ்சிபுரத்தில் உள்ள அத்திகிரி ஷேத்திரத்தில் பல்லி உருவில் வசித்தனர். முனிவர் சொன்னபடி நடக்கவே, பல்லி உருவம் நீங்க பெற்று வரதராஜ பெருமாளைச் ஷேவித்து நற்கதி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியை குறிக்கும் பொருட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கத்தில் ஒன்று வெளியில் ஒன்று என இரண்டு பல்லிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இப்பல்லிகளை தொட்டு கண்களில் ஒத்திக் கொள்கிறார்கள். ஏணி வழியாக ஏறி கைகளாலும் வஸ்திரத்தாலும் அந்த பல்லியைத் தொட்டு வரதனை வணங்கினால், நோயிலிருந்து விடுபடுபவர்கள் என்பது ஐதீகம். தவிர, அந்த பல்லிகளை தொடுவதால் நம் மீது உள்ள தீய தாக்கங்கள் மற்றும் முன் வினை தோஷம், பின் வினை தோஷங்கள் யாவும் நீங்கும்.மேலும், இப்பல்லிகளை தொட்டு வணங்குவதால் பல்லியைக் கொன்ற தோஷமும் நிவர்த்தி ஆகும். இதேபோன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் திருத்தலத்தில் அமைந்துள்ள பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயம், சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள ஆண்டாள் சந்நதியின் பின்புறம், மேற்கு நோக்கிய சுவரில் மூன்றடி நீளமுள்ளள பெரிய பல்லி ஒன்றின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இதை மோட்ச பல்லி என்று அழைக்கிறார்கள். பக்தர்கள் இதை தொட்டு தடவியும், திருவிளக்கேற்றியும், வழிபடுகிறார்கள். முக்கியமாக, ஊர்வன ஜந்துகளிடம் இருந்து தங்களை காக்கும் படி வேண்டிக் கொள்கிறார்கள். நோயை தீர்க்கும் பல்லியாக வழிபடுகிறார்கள்.

தோஷம் நீக்கும் பல்லி

வேலூர் மாவட்டம் ஜலகண்டேஸ்வரர் கோயிலில், அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நதி எதிரே உள்பிரகாரத்தில், தங்க வெள்ளி பல்லிகள் மற்றும் சூரியன் சந்திரனை விழுங்கும் ராகு கேதுக்கள் சிற்பமாக வடிக்கப்பட்டு இருக்கின்றன. இதனை தொட்டு வணங்கினால், திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மற்றும் நாகதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டி அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயிலில், வடிவுடையம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. இதனை வணங்குவதன் மூலம், எவ்வித தோஷங்களும் நீங்கப் பெறும். சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக இவை கட்டப்பட்டுள்ளன.

இதுபோல, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் கொல்லூர் அன்னை மூகாம்பிகை திருக்கோயில்களில், பல்லி வணங்கப்படுகிறது. சுவற்றில் இருக்கும் பல்லி உருவத்தை வணங்குவதால் நன்மை நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு.இதிகாசங்களில் பல்லி, கடவுளின் தூதர் அல்லது செய்தியாளன் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால், பல்லி உருவ சிற்பங்களை வணங்கி தோஷங்களிலிருந்து நாம் நிவர்த்தி பெறுவோமாக!

 

Tags :
× RELATED ஜாதகத்தின் அஸ்திவாரம் எது?