×

விண்ணின் வேந்தன் மண்ணில் வந்தான்!

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் சாதி, மத பேதமின்றி உற்சாகமாகக் கொண்டாடப்படும் உன்னத திருவிழா கிறிஸ்துமஸ். ஆண்டுதோறும் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படும் இப்பண்டிகை, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் நாட்டின் பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார். விவிலியத்தின்படி, மனித குலத்தைப் பாவங்களிலிருந்து மீட்கவும், உலகில் அன்பையும் நீதியையும் நிலைநாட்டவும் கடவுளின் தூதராக அவர் அவதரித்தார். இந்தப் பெருநிகழ்வையே உலகம் முழுவதும் ‘கிறிஸ்துமஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம். வீடுகளிலும் தேவாலயங்களிலும் ஸ்டார் கட்டித் தொங்கவிடப்படுவது, இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய விசித்திரமான நட்சத்திரத்தைக் குறிக்கிறது. குழந்தைகளின் ஆதர்ச நாயகனான ‘சாண்டா கிளாஸ்’ ரகசியமாகப் பரிசுகளை வழங்குவது இக்கொண்டாட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம். இது பிறருக்குக் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை உணர்த்துகிறது. மேலும், தேவாலயங்களில் நடைபெறும் நள்ளிரவு சிறப்புத் திருப்பலிகளில் மக்கள் கலந்துகொண்டு அமைதிக்காகப் பிரார்த்தனை செய்வர்.‘உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல, பிறரிடத்திலும் அன்பு கூறு’ என்ற இயேசுவின் போதனையைச் செயல்படுத்துவதே இந்தப் பண்டிகையின் உண்மையான நோக்கம். ஏழை எளியவர்களுக்குப் புத்தாடைகள் வழங்குவது, இனிப்புகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் உறவினர்களுடன் இணைந்து விருந்துண்டு மகிழ்வது என இப்பண்டிகை உறவுகளைப் பலப்படுத்துகிறது. இன்றைய வேகமான உலகில், பதற்றங்களையும் கவலைகளையும் மறந்து, மனிதநேயத்தைப் போற்றும் ஒரு நாளாக கிறிஸ்துமஸ் அமைகிறது. இந்தப் புனித நாளில் உலகில் அமைதி நிலவவும், மக்களிடையே சகோதரத்துவம் வளரவும் நாம் உறுதியேற்போம்.

Tags : earth ,Christmas ,Jesus Christ ,Israel… ,
× RELATED அனைத்தையும் கடந்த ஞானிகள்!