×

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உட்பட 8 பேர் பலி: மின் கோளாறு காரணமா? என விசாரணை

 

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட விமான விபத்தில் லிபியா நாட்டின் ராணுவ தலைமைத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹட்டாத் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் உள்ள அரசுக்கு ஆதரவாகத் துருக்கி ராணுவம் செயல்பட்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக லிபியா ராணுவ உயர் அதிகாரிகள் குழு துருக்கி சென்றிருந்தது. அங்காராவில் இப்பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு நேற்று இரவு 8.10 மணியளவில் ஃபால்கன் 50 என்ற தனி விமானம் மூலம் அவர்கள் லிபியா தலைநகர் திரிபோலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் மின் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அங்காராவிற்குத் தென்மேற்கே 50 மைல் தொலைவில் உள்ள கெசிக்காவக் கிராமம் அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்தக் கோர விபத்தில் லிபியா ராணுவ தலைமைத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹட்டாத், தரைப்படை தளபதி அல்-பிதூரி கரிபில் மற்றும் ராணுவத் தயாரிப்பு ஆணைய இயக்குநர் உள்ளிட்ட 5 அதிகாரிகளும், 3 விமான ஊழியர்களும் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து லிபியா பிரதமர் அப்துல் ஹமீத் தபேபா வெளியிட்ட அறிவிப்பில், ‘தேசத்திற்காக உழைத்த ராணுவத் தலைவர்களை இழந்து தவிக்கிறோம், உயிரிழந்த வீரர்களுக்குத் தேசம் அஞ்சலி செலுத்துகிறது’ என்று குறிப்பிட்டு 3 நாட்கள் தேசியத் துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளார். துருக்கி நாடாளுமன்றம் லிபியாவில் தனது ராணுவப் பணிகளை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்த மறுநாளே இந்தச் சோக சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Turkey ,Ankara ,Mohammed Ali Ahmed al-Hatad ,Libya ,
× RELATED ஜப்பான் தொழிற்சாலையில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் பலர் காயம்