கோவை, டிச. 24: கோவை அரசு மருத்துவமனையில், கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் ஐந்தாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடந்த பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் செவிலியர்களை கைது செய்த போலீசாரை கண்டித்து கருப்பு துணியை கண்ணில் கட்டியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என செவிலியர்கள் தெரிவித்தனர்.
