சமயபுரம், டிச.24: சமயபுரம் அருகே பள்ளிவிடை கிராமத்தில் உள்ள குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (45). இவர் குடித்தெரு பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டில் உள்ள பிரிட்ஜில் மின் கசிவு ஏற்பட்டு, அதில் பொருத்தியிருந்த சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதையறிந்த இந்திராணி உடனே வெளியே ஓடிவந்து அபய குரல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் உள்ள சிலிண்டர் மற்றும் எளிதில் தீ பற்ற கூடிய பொருட்களை வெளியேற்றி தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அரசு ஆவணங்கள், வீட்டில் வைத்திருந்த பணம் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த சமயபுரம் போலீசார் சம்பவம் இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
