×

நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் ஓய்வூதியம் – ஐகோர்ட் அதிரடி

சென்னை : மத்திய அரசின் திட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் ஓய்வூதியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்ற சோமசுந்தரம் என்பவர், மத்திய அரசின் “ஸ்வதந்திர சைனிக் சம்மான்” எனும் தியாகிகள் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். தமிழ்நாடு அரசின் தியாகிகள் பென்ஷன் பெறுவதால், மத்திய அரசின் பென்ஷன் வழங்க வேண்டும் எனக் சோமசுந்தரம் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து சோமசுந்தரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நிலுவையில் இருந்த போது அவர் இறந்து விட்டதால், வழக்கை அவரது வாரிசான ருக்மணி தொடர்ந்து நடத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாநில அரசு தியாகிகள் பென்ஷன் வழங்குவதால், நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அவசியமில்லை எனக் கூறி, சோமசுந்தரத்துக்கு மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் வழங்க உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் திட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சோமசுந்தரத்துக்கு பென்ஷன் வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதே சமயம், உரிய ஆவண ஆதாரங்களை சேகரித்து மீண்டும் விண்ணப்பிக்கும்படி சோமசுந்தரத்தின் வாரிசு தரப்புக்கு அனுமதியளித்த நீதிபதிகள், அந்த விண்ணப்பத்தை திட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், மாநில அரசு தியாகிகள் பென்ஷன் வழங்கியது என்பதற்காக மத்திய அரசும் பென்ஷன் வழங்க வேண்டியதில்லை. மத்திய அரசு திட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே, தியாகிகள் பென்ஷன் பெற தகுதி உள்ளது எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Tags : iCourt Action ,Chennai ,Chennai High Court ,White Exodus ,
× RELATED வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர்...