×

அகிம்சை, அமைதியை ஏற்றுக் கொள்ளாததால் தான் 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்: ஒன்றிய அரசு மீது பொன்குமார் கடும் தாக்கு

 

சென்னை: காந்தியின் அகிம்சை, அமைதியை ஏற்றுக் கொள்ளாததால் தான் 100 நாள் வேலைத்திட்டத்தில் அவரது பெயரை ஒன்றிய அரசு நீக்கியுள்ளதாக பொன்குமார் கடும் கணடனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தற்போது அத்திட்டத்திலிருந்து காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு வி.பி.ஜி ராம் ஜி திட்டம் என அதாவது வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்து, மோடி அரசு அதனை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ளது.

காந்தியின் மீது அவர்களுக்கு அப்படி என்ன கோபம்? என்று கேட்டால் காந்தி என்கிற பெயர் மீது அவர்களுக்கு கோபம் இல்லை. காந்தி தாங்கி நிற்கிற அகிம்சை, அமைதி மீது தான் அவர்களுக்கு தீராத கோபம் இருக்கிறது. ஏனென்றால் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் அகிம்சையையோ, அமைதியையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜாதி, மத, இன, கலவரத்தின் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதையே அடிப்படையாக கொண்டவர்கள். எனவே தான் காந்தியின் பெயரை நீக்கி உள்ளார்கள். காந்தி பெயர் உலகளாவிய புகழ்பெற்றதாகும்.

அதை ஒருகாலும் மோடி அரசால் மறைத்து விட முடியாது. மக்கள் தக்க பாடத்தை புகட்ட காத்து கொண்டிருக்கிறார்கள். எனவே மோடி அரசு இத்திட்டத்தை திரும்ப பெற்றிட வேண்டும். 24ம் தேதி(நாளை) இப்புதிய திட்டத்தை எதிர்த்து திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் நடத்த உள்ள நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தொழிலாளர் கட்சி முழுமையாக பங்கு கொள்ளும். தென் சென்னையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Gandhi ,Ponkumar ,Union Government ,Chennai ,Tamil Nadu Farmers-Workers Party ,Mahatma Gandhi ,
× RELATED கடையல் அருகே பரபரப்பு; கோதையாற்றில்...