×

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகளில் பார்களுக்கு குழந்தைகளுடன் சென்றால் உடனடி நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த திருவேற்காட்டை சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர். இந்த செயல் சட்டப்படி தவறானது. சிறார் நீதிச் சட்டத்துக்கு எதிரானது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்களின் வாழ்க்கையை அழித்துவிடும்.

எனவே, மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டு நெருங்கும் நிலையில் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களில் குழந்தைகள் கலந்துகொள்ளவில்லை என்பதை உறுதிசெய்யுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

Tags : New Year ,High Court ,Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,
× RELATED ஈரோட்டில் காட்டு யானை தாக்கியதால்...